மண் சட்டியில் வைத்த மீன் குழம்புக்கும் மண்பானையில் செய்த பொங்கல் சோற்றுக்கும் ஈடாக வேறெதுவும் உண்டா? அதை ருசித்து வாழ்ந்த நம் முன்னோருக்குக் கிடைத்த ஆரோக்கியம், இன்றைய நான்ஸ்டிக் பாத்திரங்களில் கிடைப்பதில்லை.

சென்னையில் எங்கே இயற்கை உணவுத் திருவிழா நடந்தாலும் மண் பாண்டங்களை விற்பனை செய்யும் அரசுவை அங்கே பார்க்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிர ஆர்வம் கொண்ட இவர், செராமிக் தொழில்நுட்பப் பட்டதாரி.

மண் பிடிக்கும்

"மண் சிலைகள், மண் பாண்டம் தயாரிக்கும் செராமிக் தொழில்நுட்பத்தைப் படிச்சிருந்தாலும், பன்னிரெண்டு வருஷமா அனிமேஷன் துறைலதான் வேலை பார்த்தேன். ஆனா, மண் பாண்டம் செய்றதுலதான் ஆர்வம் அதிகமா இருந்துச்சு. மண் மீது இருந்த வெறித்தனமான ஆர்வத்தால, வேலையை விட்டுட்டு முழு நேரமும் மண் பாண்டம் செய்ய வந்தேன்.

இப்போ மக்கள்ட்ட மண் பாண்டங்கள் பத்தி விழிப்புணர்வு அதிகரிச்சிருக்கு. மண்பாண்டங்களுக்கான தேவையும், ஆர்டரும் அதிகரிச்சிருக்கிறதால, மண் சிலைகள் செய்றதையே நிறுத்திட்டேன்" என்கிறார் அரசு.

ஒரு குடும்பத்துக்கு

நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, அவற்றைச் சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களும் மிக முக்கியமானவை. அந்த வகையில் உணவுக்குச் சுவை, மணத்துடன் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன இந்த மண் பாண்டங்கள்.

சமையல் செய்யும் பாத்திரங்கள், தட்டு, தேநீர்க் கோப்பைகள், உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் ஜாடிகள் என மக்கள் விரும்பி வாங்கும் ஒரு குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வகைப் பாத்திரங்களையும் குறைந்தபட்சம் 1,500 ரூபாயில் வாங்கிவிடலாம்.

கவனம் தேவை

ஒரே விஷயம் மண் பாண்டங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பை எல்லாம் கவனமாக வைத்துக்கொள்வது போலத்தான் இதுவும். பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போதும் கவனம் தேவை. ஒரு வேளை கைதவறி விழுந்து உடைந்தாலும் உடைந்த மண் பாண்டங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

"மண் பாண்டங்களில் நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்ப்பதை என் கடமையாக நினைக் கிறேன்" என்கிறார் மண்ணின் மைந்தன் அரசு.

தொடர்புக்கு: அரசு - 9962807914, 9080233709

Read more -->
-->